த.வெ.க. அரசுக்கு பா.ம.க. ஆதரவு ?சவுமியா அமைச்சராகிறார்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத நிலையில், 107 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்தது. இவா்களுக்கு திமுக கூட்டணிகள் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, த.வெ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் திரும்பப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை தக்கவைக்க கூடுதல் ஆதரவு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

இச்சூழலில், 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாட்டளி மக்கள் கட்சி, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் த.வெ.க. அரசை விமர்சித்து வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபகாலமாக மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது இக் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக பேசப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு த.வெ.க. அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. பா.ம.க. கூட்டணிக்குள் இணையும் பட்சத்தில், அக்கட்சிக்கு அமைச்சரவையில் ஒரு இடம் ஒதுக்க முதலமைச்சர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் சவுமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவருக்குப் பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல் அல்லது வனத்துறை ஆகிய துறைகளில் ஒன்று ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







