கோவில்பட்டி முகாமில் 300 மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கால், கை மற்றும் உதவி உபகரணங்கள்




கோவில்பட்டி கே.ஆர். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே. ராமசாமி 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, கே.ஆர். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்கள், சென்னை ஃப்ரீடம் அறக்கட்டளையுடன் இணைந்து, சேவெக்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை கால்கள், செயற்கை கைகள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், வாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று (நவம்பர் 14) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில், செயற்கைக் கை, செயற்கைக் கால், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், வாக்கர், ரோலேட்டர், சிறப்புக் குழந்தைகளுக்கான இருக்கைகள், நடைப்பயிற்சி மற்றும் நிற்பதற்கான உபகரணங்கள், ஆர்த்தோசிஸ் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு மற்றும் உடல் இயக்க உதவி சாதனங்கள் சுமார் 310 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இவர்களுக்கு சென்னை ப்ரீடம் அறக்கட்டளையின் மருத்துவக்குழு இரண்டு மாதம் முன்பு பரிசோதனை செய்து அளவு எடுத்தது.

இந்நிகழ்ச்சியில், சென்னை ஃப்ரீடம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், மறுவாழ்வு மற்றும் உடல் மருத்துவ நிபுணருமான மருத்துவர் எஸ்.சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தமது உரையில், ” கடந்த பல ஆண்டுகளாக ஃப்ரீடம் அறக்கட்டளை சார்பில் கிராமப்புறங்களில் உள்ள 45,000க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களின் தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்கள் நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
.மேலும், ஃப்ரீடம் அறக்கட்டளையின் அறங்காவலர் ஹரிஹரன் சங்கரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உஷா பரத்வாஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
மதுரை, சேவெக்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக, அதன் கிளை மேலாளர் எஸ். சபரி செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இம்முகாமில் மூலம் சுமார் 310 மாற்றுத்திறனாளிகள் தங்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாகவும், தன்னம்பிக்கையுடனும் மேற்கொள்வதற்குத் தேவையான உதவி உபகரணங்களைப் பெற்று பயனடைந்தனர்.







