வேலைக்கு சென்ற வீட்டில் ரூ.12 லட்சம் நகைகளை திருடிய பெண் கைது
தூத்துக்குடி சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ். இவரது மனைவி விரோனிகா ஜூடி (43). இவர் தனது வீட்டிலேயே தையல் எந்திரங்கள் வைத்து, துணி தைக்கும் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் டெய்லரிங் வேலைக்குத் தூத்துக்குடி 3-வது மைல் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா (34) என்பவர் வந்தார்.
நீண்ட காலமாக அங்கு வேலை செய்து வந்ததால், வீட்டின் அனைத்து இடங்களுக்கும் அவர் சகஜமாகச் செல்வார்.. இந்நிலையில், பீட்டர் ஜேம்ஸ் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் மோதிரங்கள் உள்ளிட்ட ரூ. 12 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போயின.

இதுகுறித்து விரோனிகா ஜூடி அளித்த புகாரின் பேரில், தென்பாகம் காவல் ஆய்வாளர் சேக் அப்துல்லா மற்றும் உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீட்டில் தையல் வேலை செய்து வந்த பிரியா தான் 10 பவுன் தங்க நகைகளையும் திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் பிரியாவை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 10 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.







