வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும். இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (சனிக்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், தொடர்ந்து புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதுபோல மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகு திகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் அதாவது 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் வருகிற 15, 16-ந்தேதிகளில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு இன்றும், நாளையும், மற்றும் 15, 16-ந்தேதி களில் தென்கிழக்கு வங்கக்கடலுக்கும் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 13) காலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது நாளை (நவ. 14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், நவ.15-ம் தேதி அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்தமான் கடல்பகுதியில் 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான இது, வடமேற்கு திசையில் நகர்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஞாயிற்றுக்கிழமையன்று புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்‘ என பெயரிடப்படும். அக்வான் என்பது பாரசீக மொழியில் இருந்து வந்த ஒரு புராண பெயராகும்.
ஈரானிய இதிகாசமான ஷாநாமாவில் இடம்பெறும் ஒரு மாயாஜால அரக்கனின் பெயர் அக்வான் திவ் ஆகும். பழைய பாரசீக மொழியில், அக்வான் என்பதற்கு “தீய எண்ணம்” என்று பொருள். இந்த அரக்கன் புயலாகவோ அல்லது காற்றாகவோ உருமாறும் சக்தி கொண்டவனாக கதைகளில் சித்தரிக்கப்படுகிறான்.







