மலேசியாவில் இருந்து கடத்தல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 5 டன் கசகசா பறிமுதல்
மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு தூத்துக்குடி தனியார் கன்டெய்னர் முனையத்தில் வந்திறங்கிய சந்தேகத்திற்கிடமான கன்டெய்னர் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டன.

ஆவணங்களில் அந்த கன்டெய்னரில் ‘கால்சியம் கார்பனேட்’ எனப்படும் சுண்ணாம்புத் தூள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகள் கன்டெய்னரைத் திறந்து சோதனையிட்டபோது, முன்னால் இருந்த சுண்ணாம்புத் தூள் மூட்டைகளுக்குப் பின்னால் சுமார் 5 டன் எடையுள்ள கசகசா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சர்வதேச சந்தையில் சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள அந்த 5 டன் கசகசாவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரைக் கைது செய்துள்ள அதிகாரிகள், இதன் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







