காணாமல் போன விழுப்புரம் சிறுமியின் கதி என்ன? பெற்றோரை சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல்
விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மனைவி பவானி. இவர்களது மகள் ஹேமலதா (வயது 7). கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த ஹேமலதா திடீரென காணாமல் போனார். இதையடுத்து, சிறுமியைக் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, காவல்துறையினர் தீவிரமாகத் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றுடன் 34 நாட்கள் கடந்தும் சிறுமி குறித்த எந்தவொரு தடயமோ, ஆதாரமோ கிடைக்கவில்லை. அவரது சிறுமியின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி.நேரில் சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது :-
பவானி வடிவேலு தம்பதியரின் இரண்டாவது மகள் ஏழு வயதான சிறுமி ஹேமாவதி. இரண்டாவது படிக்கக்கூடிய ஹேமாவதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாள் காலையிலிருந்து காணவில்லை.
அந்த சிறுமி காணாமல் போய் கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது. ஆனால், அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் உண்மையாகவே இதுவரை எதையும் செய்ததாக தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் தவெக அரசு எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் நல ஆணையம், காவல்துறை இரண்டுமே முதலமைச்சர் விஜய் நேரடிnபார்வையில் இருக்கக்கூடிய துறைகள். அவருக்கு கீழே வரக்கூடிய துறைகள் கூட செயல்பட்டு இன்றி இருப்பது வெட்கக்கேடானது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கேக் ஊட்டிவிடும் முதலமைச்சர் ஏன் இந்த வீட்டுக்கு வந்து குழந்தையின் பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லவில்லை. கண்டிப்பாக, அந்த குழந்தையை கண்டுபிடித்து தருவோம் என சொல்ல அவர் வரவிட்டாலும், இங்க இருக்கக்கூடிய பொறுப்பு அமைச்சராவது வந்து இந்த குடும்பத்தில் யாரையாவது அழைத்து ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லி இருக்கலாம்.

முதலமைச்சரே தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி அச்சப்படக்கூடிய அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. நேற்றுகூட கொளத்தூருக்கு சென்றபோது, ரசிகர் ஒருவர் ஓடி வந்ததை பார்த்து பதறி ஓடுகிறார் முதலமைச்சர். ஏனெனில் பாதுகாப்பு குறித்து அவரே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் மக்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டிய ஆட்சியே, தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி பயப்படும் நிலையில் இருக்கிறது . அப்படிப்பட்ட ஆட்சியைதான் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அலங்கோலமான ஆட்சியில் யாரை கேட்டு ஆட்சி பொறுப்புக்கு வந்தாங்களோ, அந்த குழந்தைகளுக்கு கூட ஒரு பாதுகாப்பு தர முடியாத ஒரு தரம் இல்லாத ஒரு ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஒரு முதலமைச்சர் அவருடைய நேரடி துறைகளில் தவறுகள் நடக்கும் போது கூட வாயை திறக்க மாட்டேன் என மவுனம் சாதிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை இதுவரைக்கும் தமிழ்நாடு பார்த்ததே கிடையாது.
திமுக கூறியபின்னர் அதை இந்த அரசு செய்யுமானால், அதற்கு நேரடியாக திமுகவே ஆட்சியில் இருக்கலாமே என்று கேட்கும் அளவுக்கு இன்றைய ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியது பெண்கள், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன், ஆளுங்கட்சியினருக்கே தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
இந்த அரசு குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தாமல், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு குற்றங்கள் குறைந்திருக்கின்றன, அதிகரித்திருக்கின்றன என்று புள்ளிவிவரங்களைக் காட்டி நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆறு குற்றங்கள் நடைபெற்றிருந்தால், அதற்கு முந்தைய ஆண்டு பதினொரு குற்றங்கள் நடைபெற்றன என்று கூறி தங்களது ஆட்சியை நியாயப்படுத்துவது என்ன விதமான அணுகுமுறை என தெரியவில்லை. குற்றங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பேசுவதிலேயே இவர்களின் ஆட்சியின் நிலை வெளிப்படுகிறது.

திமுக சார்பில் நாங்கள் போராட்டங்களை நடத்த முடியும். எங்கள் தலைவர் தொடர்ந்து குரல் கொடுக்க முடியும். சட்டமன்றம் நடைபெறும்போது அங்கும் இதுகுறித்து கேள்வி எழுப்ப முடியும்.
ஆனால், ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு உண்மையாகச் செயல்பட்டு, இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்குக் காவல்துறையைப் பயன்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல், தங்களுடைய பாதுகாப்புக்கும் சொந்த அரசியல் நலன்களுக்கும் மட்டுமே அரசாங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களால் குற்றங்களை தடுக்க முடியாவிட்டால், குற்றம் நடந்த பிறகாவது குற்றவாளிகளைக் கண்டறிந்து, காணாமல் போன குழந்தைகளையும் பெண்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் மக்களுக்கே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். முதலமைச்சருக்கே தனது ஆட்சியில் தனக்குப் பாதுகாப்பு இருக்குமா என்ற நம்பிக்கை இல்லாத நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய கேக்கில் முதலமைச்சர் All is Well என்று எழுதிய அட்டையுடன் கேக் கொடுத்து வாழ்த்து தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.







