பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் ; தூத்துக்குடி விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்
தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
மாநாட்டின் இறுதி நாளான இன்று நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகள் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு.மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து, விவசாயிகள் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா சிறப்புரையாற்றி மாநாட்டை நிறைவு செய்து வைத்தார். இம்மாநாட்டில் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகளான ரவீந்திரன், கே.பி. பெருமாள், பி. பெருமாள், டெல்லி பாபு, கே.பி. ஆறுமுகம், புவிராஜ் உட்படத் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் நிறைவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*தமிழ்நாடு முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி, விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
*தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியுடன் நிலைநாட்ட வேண்டும்.

*விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பயிர் காப்பீட்டு நிறுவனத்தை மாநில அரசே சொந்தமாகத் தொடங்க வேண்டும்.
*பெண் விவசாயிகளின் நில உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்
மேற்கண்டவை உள்ளிட்டவிவசாயிகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன







