கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் எஸ்.எஸ்.டி. எம்.கல்லூரி மாணவர்கள் பனை விதைகள் நட்டனர்
Oplus_16908288

தேசிய நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், “ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி”யின் ஒரு அங்கமாக இன்று 24.9.2026 காலை கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கண்மாயில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி எஸ். எஸ்.டி. எம். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 115 & 118 மற்றும் நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரி செயலாளர் கண்ணன் அனுமதியுடனும், கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். லிங்கம்பட்டி பஞ்சாயத்து அலுவலர் தேவிகா, பெருமாள்பட்டி பஞ்சாயத்து அலுவலர் சீனிவாசன், ஜானவேல் மற்றும் மாற்றுத்திறனாளி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பனை மரங்களின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

தொடர்ந்து, லிங்கம்பட்டி கண்மாய் பகுதியில் திட்டமிட்டபடி 300 பனை விதைகள் நடப்பட்டன. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 30 பேர் தன்னார்வலர்களாக ஆர்வத்துடன் பங்கேற்று பனை விதை நடும் பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களிடயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் சமூக பொறுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஜெய்சிங்கராஜ்,சுசிலா ஆகியோர் செய்திருந்தனர்.







