தவறான வழியில் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை; முதல் அமைச்சர் விஜய் எச்சரிக்கை
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தவெக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்தும் பெற்றுள்ளது.
குறிப்பாக, மனு கொடுக்க வந்தவரை தாக்கியதாக துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ , கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சூழலில்தான் இன்று நடைபெற்ற தவெக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. ஆலோசனை கூட்டம் மாலை 4 மணியளவில் தொடங்கிய நிலையில் எம்.எல்.ஏக்களை தனித்தனியாக முதல் அமைச்சர் விஜய் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின் போது எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவல்கள் வருமாறு
தவெக எம்.எல்.ஏ.க்களை சிக்க வைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. நமக்கு எதிரிகள் அதிகமாக உள்ளனர். தவெக ஆட்சியை முடக்க திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளேன். நமது கூட்டணியில் உள்ளவர்களை தவிர, நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளன.

எனவே, எதிர்க்கட்சிகள் விரிக்கும் டிரப்பில் சிக்கிக்கொள்ளக் கூடாது. தவறான வழியில் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.. மக்கள் பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்த பிரச்சினை என்றாலும் எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்திக்கலாம்” என்று முதல் அமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.







