• November 12, 2026

தமிழ்நாட்டில்  அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்: ஒரு நாள் சோதனையில் ரூ.1 கோடியே 73 லட்சம் பறிமுதல்

 தமிழ்நாட்டில்  அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்: ஒரு நாள் சோதனையில் ரூ.1 கோடியே 73 லட்சம் பறிமுதல்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 55 துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மக்களுக்கு சேவை அளிக்கும் துறைகள்  22 ஆகும். இந்த சேவைத் துறைகளை மக்கள் நாடும்போது, அங்குள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களில் பெரும்பாலானோர் லஞ்சம் வாங்கிக் கொண்டே கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர்.

அடிக்கடி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சார்-பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று, கடந்த 4 மாதங்களில் அரசு அலுவலகங்களில் மேற்கொண்ட சோதனையில், எந்த அலுவலகத்திலும் லஞ்சப் பணம் சிக்காமல் இல்லை. எந்த பயமுமின்றி ஜிபே மூலமும் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று 36 மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தியதில், ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 207 லஞ்சப் பணம் ரொக்கமாகவும், ரூ.1 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரத்து 459 லஞ்சப் பணம் ஜிபே மூலம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் போலி ரசீது மூலம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலித்த தொகை ரூ.12,750-ம் அடங்கும். இப்படி அரசுக்கு வரவேண்டிய பணம், அரசு அதிகாரிகள், ஊழியர்களாளேயே களவாடப்படுவது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சத்தை ஒழித்து, முறைகேடுகளை தடுத்தாலே அரசின் கஜானா நிறையத் தொடங்கிவிடும். ஆனால், “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பாடல் வரிகளைப்போல, லஞ்சம் வாங்குபவர்கள் நிறுத்தாவிட்டால், அதை ஒழிக்க முடியாது என்ற நிலையே இருக்கிறது. இனி இரும்புக்கரம் கொண்டு லஞ்சத்தை ஒழிப்பது அரசின் கையில்7தான் இருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *