பழனி மலைக்கோவில் ரோப் கார் சேவை 64 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்

முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி மலைக்கோவில்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது.
இந்த மலைக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக கேபிள் கார் மற்றும் ரோப் கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோப் கார் நிலையத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி கடந்த 64 நாட்களாக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது பெட்டிகளில் தலா 250 கிலோ கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. இதனை வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று செப்டம்பர் 23 முதல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் தொடங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவிலுக்கு வந்து பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரோப் காரில் பயணம் செய்தனர்.







