மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் 5 முனைப்போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 5 முனை போட்டி நிலவுகிறது.
இரண்டு தொகுதிகளுக்கான ஏற்பாடு தகவல் கடந்த 9 ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. பின்னர் வேற்பு மனுக்கள் பரிசீலனை, வாபஸ் பெறுதல் முடிந்து இன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது
இறுதியாக மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளதால் இனி பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி விடும்.







