தூத்துக்குடி ரவுடி கொலை: மனைவியுடன் கூட்டாளி கைது
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்தவர் செல்வம் (46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

செல்வத்திற்குச் சொந்தமான தோட்டம் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று தனது தோட்டத்திற்குச் சென்ற செல்வத்தை மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். காவல் ஆய்வாளர் நவீன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
விசாரணையில், செல்வத்தின் கூட்டாளியான பொட்டல்குளத்தை சேர்ந்த சந்துரு (26) மற்றும் அவரது மனைவி கவுரி ஆகிய இருவரும் இக்கொலையில் ஈடுபட்டது அம்பலமானது.
மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செல்வம், சந்துரு இருவரும் இணைந்து குளத்தை குத்தகைக்கு எடுத்து தாமரைப் பூக்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர்

.
சமீபத்தில் ஒரு குளத்தை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக செல்வத்தைச் சந்துருவும் அவரது மனைவியும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்துரு மற்றும் கவுரி ஆகிய இருவரையும் கூடங்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







