வங்கி மேலாளரை காரில் கடத்தி ரூ. 7 லட்சம் பறிப்பு : 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, பாலையம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 42), ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று குற்றாலத்திற்கு அருவியில் குளிப்பதற்காக வந்த பொன்னுச்சாமி, தனது செல்போனில் ஒரு செயலி மூலம் ஒருவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி மிலிட்டரி கேண்டீன் பகுதிக்கு வருமாறு அந்த நபர் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பொன்னுச்சாமியை, காரில் வந்த மர்ம நபர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளார்.

தென்காசி சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, கடையநல்லூர் இடைகால் பேருந்து நிறுத்தம் அருகே மேலும் 4 பேர் காரில் ஏறினர். அவர்கள் பொன்னுச்சாமியை மாறி மாறித் தாக்கி மிரட்டினர்.
மேலும், அவரது பையில் இருந்த ரூ.1,000 ரொக்க பணத்தை பறித்ததுடன், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டையும் பிடுங்கியுள்ளனர். பின்னர், கடவுச்சொல்லைக் கேட்டு மிரட்டி வாங்கிய அந்தக் கும்பல், அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
பொன்னுச்சாமியின் விருதுநகர் கிளை வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது செல்போனில் இருந்த மொபைல் செயலி மூலம் அவசர அவசரமாக ரூ.1 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் அருப்புக்கோட்டை கிளைக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் வரை பறித்ததாகக் கூறப்படுகிறது.
பணம் முழுமையாகப் பரிமாற்றம் செய்யப்படும் வரை பொன்னுச்சாமியை காரிலேயே ராஜபாளையம் வரை அழைத்துச் சென்ற அந்த கும்பல், இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.
பின்னர், கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் அவரை இறக்கிவிட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வங்கி மேலாளர் பொன்னுச்சாமி அளித்த புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், நெல்லை சங்கர்நகர் வடக்கு சிதம்பர நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜன் (வயது 28), மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த முத்துசெல்வன் (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர் பகுதியில் பஞ்சு வியாபாரியை காரில் கடத்திச் சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட இதே கும்பல் தான் வங்கி மேலாளரையும் கடத்தி 7 லட்சம் ரூபாய் பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது
இவர்கள் கடந்த மாதம் இளம்பெண் உட்பட 6 பேர் சேர்ந்து கடையநல்லூர் பஜார் சாலையில் பட்டப்பகலில் பஞ்சு வியாபாரியை காரில் கடத்தி நகைகளை பறித்து இறக்கிவிட்டுச் சென்றதும் இவர்கள்தான் என விசாரணையில் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து
இவர்கள் இருவரும் அந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டனர் ஏற்கனவே பஞ்சு வியாபாரி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பெண் உட்பட 4 பேர் சிறையில் உள்ளனர்.







