கோவில்பட்டியில் சட்ட விதிமுறைகளை மீறி நடந்த `எக்ஸ்போ ‘ நிறுத்தம்
தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் (உரிமம் வழங்குதல்) சட்டம் 1965ன் படி, கட்டிட உரிமம் எந்த உபயோகத்திற்காக வழங்கப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், திருமண மண்டபங்களில் எக்ஸ்போ என்ற பெயரில் நடத்தப்படும் வணிக கண்காட்சிகளை உரிய அனுமதியின்றி நடத்தக் கூடாது.
திருமண மண்டபங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக இருந்த போதும், கோவில்பட்டியில் எட்டயபுரம் காலையில் உள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் இன்று காலை தனியார் நிறுவனம் சார்பில் எக்ஸ்போ தொடங்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்டால்கள் அமைத்து இருந்தனர் பொதுமக்கள் பலரும் அங்கு சென்று பொருட்களை வாங்கி வந்தனர்.
இது பற்றி சமூக வலைதளங்களில் எதிர்ப்பு குரல் எழுந்தது. இவை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று எக்ஸ்போ நடத்த தடை விதித்தனர். இதை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது
திருமண மண்டபத்தின் உட்பகுதியில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் மண்டபத்தில் முன் பகுதி கதவை மூடி விட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கதவை திறந்து அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.







