கோவில்பட்டி அருகே உணவகத்தில் நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ்சில் தம்பதியின் 40 பவுன் நகை திருட்டு
Oplus_16908288

நெல்லை பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவரது மனைவி ஜூலியட். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தங்கள் மகன் வீட்டிற்கு செல்வதற்காக இரவில் நெல்லையிலிருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.

அந்த பஸ் கோவில்பட்டிக்கு முன்னதாக கங்கைகொண்டான் சுங்கச்சாவடியை கடந்து கரிசல்குளம் விலக்கு அருகே உணவகத்தில் பயணிகள் சாப்பிடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை நிறுத்தியுள்ளார். பஸ்சில் இருந்த பெரும்பான்மையான பயணிகள் கீழே இறங்கி உணவகத்திற்குச் சென்றனர்.
ஜஸ்டின், ஜூலியட் தம்பதியும் தங்களது உடைமைகளை பஸ்சிலேயே வைத்துவிட்டு சாப்பிட சென்றனர்.
பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் தங்களது இருக்கைக்கு திரும்பியபோது, ஜூலியட் வைத்திருந்த கைப்பை மாயமாகியிருந்தது தெரியவந்தது. அந்தப் பையில் 40 பவுன் தங்க நகைகள் இருந்தன. நகைகள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் அனைவருடன் ஓட்டுநர் பஸ்சை கயத்தாறு காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். அங்கு போலீசார் பஸ்சில் ஏறி பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். இருப்பினும் நகைகள் கிடைக்கவில்லை.
திருநெல்வேலி தம்பதி நகைகள் இருந்த பையை இருக்கையிலேயே வைத்துவிட்டுச் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர் யாரோ இந்த துணிகர திருட்டை அரங்கேற்றியுது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்வையிட்டுப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டும் இதே உணவகத்தில் பஸ்சை நிறுத்திவிட்டுப் பயணி ஒருவர் சாப்பிடச் சென்றபோது, அவரது இருக்கையிலிருந்த ரூ. 10 லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்றார்.பின்னர் அந்த நபரைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.







