உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களுக்கு கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அதிரடி உத்தரவு
Oplus_16908288
கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள தனியார் உரக்கடை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் பேசியதாவது: –
உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், அன்றைய தினத்திற்கான உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியலை கடையின் வெளிப்புறத்தில் அல்லது விவசாயிகளின் பார்வையில் படும் வகையில் கட்டாயமாகக் காட்சிப்படுத்த வேண்டும்.

எந்த வகையான உரம் எவ்வளவு இருப்பில் உள்ளது, அதன் விற்பனை விலை என்ன என்பது குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.
உர விற்பனையாளர்கள்.
தங்களது விற்பனை நிலையம் மற்றும் உரங்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகளுக்கான உரிய பதிவு மற்றும் அங்கீகாரங்களை முறையாகப் பெற்றிருக்க வேண்டும். உரங்களைப் பெறும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட மூலத்திற்கும் உரிய மூலச் சான்றிதழ் படிவம் ‘ஓ’ (Form O) பெற்றிருப்பதுடன், தேவையான பதிவுகள் மற்றும் ஒப்புதல்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
–
அதேபோல், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் செல்லுபடியாகும் விற்பனை மற்றும் இருப்பு உரிமம் (Form VIII) கட்டாயமாக இருக்க வேண்டும். பூச்சிக்கொல்லி
மருந்துகளை உரிய உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து
மட்டுமே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
உரிய உரிமம் இல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யவோ அல்லது இருப்பில் வைத்திருக்கவோ கூடாது.
உயிர் உரங்கள், உயிரியல் பொருட்கள் மற்றும் உயிரூக்கிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை விற்பனை செய்யும் போது, அவற்றுக்கு நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தேவையான பதிவு, அங்கீகாரம், மூலச் சான்று மற்றும் தொடர்புடைய
1
A
ஆவணங்கள் இருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் மற்றும் தேவையான ஒப்புதல்கள் இல்லாமல் இத்தகைய பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும், விற்பனை நிலையங்களில் காலாவதியான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி
மருந்துகளை விற்பனைக்காக வைத்திருக்கக் கூடாது. காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பின், அவற்றை உடனடியாக விற்பனைக்குரிய இருப்பிலிருந்து தனியாகப் பிரித்து, ‘விற்பனைக்கு அல்ல பயன்பாட்டிற்கு அல்ல’ எனத் தெளிவாகக் குறியிட்டு, பாதுகாப்பான தனியிடத்தில் வைத்து, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை அரசு நிர்ணயித்த அல்லது அங்கீகரிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக, உரங்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.
விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும்போது, மின்னணு புள்ளி விற்பனை இயந்திரம் (பி.ஓ.எஸ்.) மூலம் விவசாயியின் ஆதார் அடையாளத்தைப் பயன்படுத்தி உடனடியாக விற்பனைப் பதிவு செய்ய வேண்டும். விற்பனை செய்யப்பட்ட உரத்தின் அளவு மற்றும் விவசாயியின் விவரங்கள் முறையாகப் பதிவாக வேண்டும். விற்பனை முடிந்தவுடன் அதற்கான ரசீதை விவசாயியிடம் உடனடியாக வழங்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும்போதும் ஒவ்வொரு விற்பனைக்கும் உரிய விற்பனை ரசீது அல்லது ரொக்கப் பட்டியல் வழங்க வேண்டும். விற்பனை செய்யப்பட்ட பொருளின் பெயர், அளவு, தொகுதி எண், விலை உள்ளிட்ட தேவையான விவரங்கள் முறையாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்.
விவசாயிகளை கட்டாயப்படுத்தி அவர்கள் வாங்க விரும்பாத இணைப்புப் பொருட்கள் அல்லது கூட்டுப் பொருட்களை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது பிற வேளாண் இடுபொருட்களுடன் சேர்த்து வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்களை தங்களது விருப்பத்தின் அடிப்படையில் வாங்குவதற்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படும் போது அனைத்து விற்பனைப் பதிவுகள், இருப்புப் பதிவேடுகள் மற்றும் ரசீதுகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் முறையற்ற முறையில் உர விற்பனை செய்து பதிவுகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பூச்சிக்கொல்லி மருந்துகளை சேமிக்கும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் சேமிக்கப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் இடங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உட்கொள்ளும் உணவு மற்றும் தீவனப் பொருட்களை சேமிக்கவோ அல்லது
விற்பனை செய்யவோ கூடாது. பூச்சிக்கொல்லி மருந்துகள் கசிவு, சேதம் அல்லது தவறான கையாளுதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்பட வேண்டும். மேலும், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நேரடி இருப்பு, இருப்புப் பதிவேடு, கொள்முதல் பட்டியல்கள், விற்பனைப் பதிவுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் மேற்கொள்ளும்போது உரிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை உடனடியாக சமர்ப்பித்து ஆய்வுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

ஆய்வு விதிமுறைகளை மீறி உரம் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தல், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருத்தல், உரிய பதிவு அல்லது உரிமம் இல்லாமல் விற்பனை செய்தல், அங்கீகரிக்கப்படாத அல்லது தரமற்ற பொருட்களை விற்பனை செய்தல், தவறான பதிவுகளைப் பராமரித்தல், விவசாயிகளை இணைப்புப் பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்துதல் சம்பந்தப்பட்ட உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், விற்பனையாளர்கள் மீது விற்பனைத் தடை உத்தரவு உள்ளிட்ட உரிய துறைரீதியான நடவடிக்கைகளும், சட்டரீதியான நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் எச்சரித்தார்.
மேலும், விவசாயிகள் உரம் வாங்க வரும்போது. தங்களது ஆதார் அட்டையை உடன் கொண்டு வர வேண்டும். பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் உரிய முறையில் விற்பனை பதிவு செய்யப்பட்ட பின்னர் உரத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கான விற்பனை ரசீதை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தல், கட்டாய இணைப்புப் பொருட்களை வாங்குமாறு வற்புறுத்துதல் அல்லது பிற முறைகேடுகள் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், தரமான வேளாண் இடுபொருட்கள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும், கோவில்பட்டி வட்டாரத்தில் செயல்பட்டு வரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் பேசினார்.
தொடக்கத்தில் வேளாண்மை அலுவலர் வே.காயத்ரி வரவேற்றுப் பேசினார்.,







