கழுத்தை நெரித்து பெண் கொலை; கள்ளக்காதலன் கைது
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). டிரைவர். இவருடைய மனைவி சுகுணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுகுணாவுக்கும், பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தவுபிக் (28) என்பவருக்கும் இடையே கடந்த 12 ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டின் அருகில் சுகுணா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் பயன் இல்லாமல் அவர் இறந்து போனார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், பி.பி.அக்ரஹாரம் பகுதியில் சுகுணாவின் உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகுணாவின் உறவினர்கள் கூறும்போது. ‘சுகுணாவின் கழுத்தை நெரித்து தவுபிக் தான் கொலை செய்துள்ளார். எனவே அவரை கைது செய்து எங்களிடம் காண்பிக்க வேண்டும். மேலும் அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறினர்.
அதைத்தொடர்ந்து போலீசார், தவுபிக்கை கைது செய்து, வீடியோ கால் மூலம் அங்கிருந்தவர்களிடம் காண்பித்தனர். இதையடுத்து சுகுணாவின் உறவினர்கள் மாலை 5 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் கூறியதாவது:-
தவுபீக் திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் காலையில் தவுபிக் வீட்டுக்கு சுகுணா சென்றுள்ளார். அங்கு 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தவுபிக், சுகுணா வின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் சுகுணா மயங்கி கீழே விழுந்து எந்தவிதமான அசைவின்றி கிடந்துள்ளார்.

இதனால் சுகுணாவை தனது வீட்டுக்கு வெளியே சிறிது தூரம் இழுத்து சென்று ரோட்டோரம் போட்டு விட்டு தவுபிக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து தவுபிக்கை தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தோம். இதற் கிடையில் பிரேத பரிசோதனையில் சுகுணா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, கள்ளக்காதலனான தவுபிக்கை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.







