கோவில்பட்டியில் ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவுப்பொருள் அதிகாரிகள் சோதனை
Oplus_16908288
கோவில்பட்டியில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார முறைகளில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா? காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பொருள் கண்காணிப்பு நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளிநாட்டு தரத்தில் தயாரிக்கும் பிரபல சிக்கன் பர்கர், பீட்சா உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனமான மீட் அண்ட் ஈட் உணவு விடுதியில் அதிகாரிகள் சோதனையிட்ட போது சமையல் அறையில் சுகாதாரக் குறைவை கண்டனர். உணவு அருந்துவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில் அந்த உணவு விடுதியை அதிகாரிகள் மூட வைத்தனர்.
பேக்கரிகளில் சோதனையிட்டு தரமான பொருட்களைக் கொண்டு உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறதா? என்று சோதனையிட்டனர்.
மேலும் டீக்கடைகளில் பார்சல் கொடுக்கப்படும் வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இலை களில் வைத்து மட்டுமே தர வேண்டும். பத்திரிக்கை காகிதத்தில் வைத்து கொடுக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டனர்.
இதை மீறி யாராவது டீக்கடைகளில் வடை, பஜ்ஜி போன்றவற்றைமடித்துக் கொடுக்க காகித்தை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் பாலிதீன் கவர்களில் பார்சல் டீ கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்து கூறி இனிமேல் இது போன்ற தவறை செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறப்பட்டது.
சமீப காலமாக கோவில்பட்டி நகரில் பல்வேறு பூத் கடைகள் புதிதாக முளைத்துள்ளன. அவற்றில் சிக்கன் பயன்படுத்தி பல்வேறு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் தரம் குறித்து அதிகாரிகள் சோதனையிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக இருந்துள்ளது.

மேலும் அது போன்ற பூத் கடைகளின் சுற்றுப்புற சுகாதாரம் சரியாக இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் பகல் நேரத்தில் சிறுநீர் கழிக்கும் இடமாக இருக்கும் பகுதிகளில் மாலை நேரத்தில் உணவு பொருட்கள் விற்கும் பூத் கடைகளை காண முடிகிறது.
இவற்றையெல்லாம் நகராட்சி சுகாதார அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற கடைகளுக்கு சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் செய்யப்படுகிறது.
இவற்றையெல்லாம் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







