கோவில்பட்டியில், மறந்துபோன `காவலர் நினைவுத்தூண்’
கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் பிரிவு வளாகத்தில் நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. அந்த வழியாகச் செல்லும்போது அனைவரும் அதைப் பார்க்க முடியும். ஆனால் அந்த நினைவுத்தூண் அமைக்கப்பட்டதற்கான காரணம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
கோவில்பட்டி அருகே திருவேங்கடம் வட்டம் குருஞ்சாகுளம் கிராமத்தில் 31.12.1980 அன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி, பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மந்திரம் பிள்ளை என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

மறைந்த காவலர் மந்திரம் பிள்ளையின் நினைவாக, தமிழக அரசின் காவல்துறை சார்பில் கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் பிரிவு வளாகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி, தமிழக காவல்துறையில் பணியாற்றி வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, காவல்துறை சார்பில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21 ம் தேதி மறைந்த காவலர் மந்திரம் பிள்ளையின் நினைவுத்தூணில் காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், நீண்ட காலமாக வீரவணக்க மரியாதை செலுத்தப்படாமலும், அந்த நினைவுத்தூண் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது.
மறந்து போன இந்த காவலர் நினைவுத்தூணை பராமரித்து, மீண்டும் வீரவணக்க மரியாதை செலுத்த வேண்டும் என்பது காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

காவலர் மந்திரம் பிள்ளையின் நினைவுத்தூணை பராமரித்து, உரிய மரியாதை செலுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







