சாமி சிலைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தூத்துக்குடி சிவன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு
Oplus_16908288
தமிழகத்தில் கோவில் சிலைகளை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
அதன்படி, நெல்லை மண்டல சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையில், உதவி ஆய்வாளர் திருவளவன் மற்றும் தலைமைக் காவலர் செல்லப்பா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முதற்கட்டமாக, கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்களிடம் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் அதன் விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கோவிலில் மொத்தம் 34 உலோகச் சிலைகள் இருப்பதும், அதற்கான முறையான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அச்சிலைகள் சேதமின்றிப் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், கடந்த 2002-ஆம் ஆண்டு மூக்குப் பகுதியில் சேதமடைந்ததால் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையை ஆய்வாளர் வனிதா ராணி பார்வையிட்டு சோதனை செய்தார். அச்சிலை எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்ததால் சேதமடைந்தது சோதனையில் தெரியவந்தது. இதன்பின், கோவிலில் உள்ள அனைத்துக் கற்சிலைகளையும் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் சேதமன்றி சரியாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வின் ஒரு பகுதியாக, கோவிலுக்கு வருகை தந்த சl பக்தர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். “தினமும் கோவிலுக்கு வரும் உங்களுக்கு சிலைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டிருப்பது தெரியுமா?” என கேட்டறிந்தனர். அதற்குப் பக்தர்கள், “நாங்கள் பல வருடங்களாக பார்த்து வரும் அதே சிலைகள்தான் எந்த மாற்றமுமின்றி உள்ளன” என்று தெரிவித்தனர்.

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்த இந்த ஆய்வின் முடிவில், கோவிலில் உள்ள அனைத்துச் சிலைகளும் அதற்கான ஆவணங்களும் சரியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.







