சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி சரக்கு கப்பல் ; துறைமுகத்தில் வரவேற்பு

சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரீஜினல் கன்டெய்னர் லைன் நிறுவனம் மூலம் சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரீஜினல் கன்டெய்னர் லைன் நிறுவனம் மூலம் நேரடியாக சீனா, வியட்நாம் வழியாகத் தூத்துக்குடிக்குச் சரக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல்முறையாக ‘எம்.வி.நவ்தா. பூம்’ என்ற சரக்கு பெட்டக கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது.

அந்தக் கப்பலை வ.உ.சி. துறைமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர்.
147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், 1,100 சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.
இந்தக் கப்பல் சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, வியட்நாம் ஹைபோங் துறைமுகம் வழியாகத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு காட்டுப்பள்ளித்துறைமுகம், வியட்நாமின் சூலாய் துறைமுகத்தை சென்றடைகிறது. அங்கிருந்து சீனாவின் கின்ஷோ துறைமுகம் திரும்புகிறது.
சீனாவின் கின்ஷோவில் இருந்து தூத்துக்குடி வந்தடைய 13 நாட்களும், வியட்நாமின் ஹைபோங்கில் இருந்து தூத்துக்குடி வந்தடைய 12 நாட்களும் ஆகிறது.
இந்த கப்பல் தற்போது வாரத்துக்கு இருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் தேவையைப் பொறுத்து சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி. துறைமுகம் 2026-27 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 4.42 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 4.28 சரக்கு பெட்டகங்களைக் கையாண்டு இருந்தது.
இது 3.18 சதவீத வளர்ச்சி ஆகும். வ.உ.சி.துறைமுகத்தின் சரக்கு தளம்-7ல் அமைய உள்ள மூன்றாவது சரக்குபெட்டக முனையம் மற்றும் வெளித்துறைமுகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் சரக்கு பெட்டக கையாளுதல் மேலும் அதிகரிக்கும்.







