லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.3¼ லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒரு விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் ரூ.50 செலுத்தி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அடுத்த 2 நாட்களில் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை 2 மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசினர்.
அவர்கள் லாட்டரி சீட்டில் உங்களுக்கு ரூ.1.25 கோடி பரிசு விழுந்து இருக்கிறது.அதனைப் பெற ஜி.எஸ்.டி., டி.டி.எஸ்., என்.ஓ.சி. ஆகிய செலவுகளுக்கு ரூ.3½ லட்சம் அனுப்புமாறு கூறினர்.

இதனை நம்பிய அந்தப் பெண், ஜிபே மற்றும் போன்பே மூலம் செல்போனில் பேசிய மர்ம நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
அதன்பிறகும் மர்ம நபர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு வரிகளுக்காகக் கூடுதல் பணம் அனுப்புமாறு கேட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண், ஆன்லைன் லாட்டரி விளம்பரம் குறித்து விசாரித்த போது, அந்த விளம்பரம் பணம் மோசடிக்காக அனுப்பியிருப்பது தெரியவந்தது. தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த அந்தப் பெண் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







