உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீடிப்பு
Oplus_16908288
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், 37 மாவட்டங்களில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனால் மொத்தம் 37 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் மூலம் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தைத் தொடர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளே தேர்தல் தாமதத்திற்கான முக்கியக் காரணமாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கெனவே செயல்பட்டு வந்த 46 கிராம ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 93 கிராம ஊராட்சிகளும், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஊராட்சி வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்தல், வார்டுகளுக்கான இடஒதுக்கீட்டை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், இது தொடர்பான வழக்கு எண் W.P.No.30639/2024 சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் நிறைவடையாத நிலையில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 261-A-ன் கீழ், அக்டோபர் 20, 2026 முதல் ஏப்ரல் 19, 2027 வரை தனி அலுவலர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி,கிராம ஊராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி அலுவலர்களாகச் செயல்படுவார்கள்.
ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர் அல்லது ஊராட்சி ஒன்றியத் தணிக்கை உதவி இயக்குநர் பொறுப்பு வகிப்பார்கள்.
மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அல்லது கூடுதல் ஆட்சியர் தனி அலுவலராகச் செயல்படுவார்கள்.
அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த நீட்டிப்பு உத்தரவு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர்களின் பதவிக்கால நீட்டிப்பு தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிர்வாகம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.







