கோவில்பட்டி முத்தானந்தபுரம் மடத்தின் மடாதிபதி சொரூபானந்த சுவாமிகள் காலமானார்
Oplus_16908288
கோவில்பட்டி முத்தானந்தபுரம் மடம் என்பது ஒரு ஆன்மீக ஸ்தலமாகும். இந்த மடத்தின் மடாதிபதியாக சொரூபானந்த சுவாமிகள் இருந்து வந்தார்.
கோவில்பட்டியில் நடைபெறும் பள்ளி ஆண்டு விழாக்கள், மத நல்லிணக்க நிகழ்ச்சிகள், மற்றும் பொது நலக் கூட்டங்களில் இந்த மடத்தின் சார்பில் சுவாமிகள் கலந்துகொண்டு ஆசி வழங்கி வந்தார்.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் பகுதியில் இந்த மடம் அமைந்துள்ளது.
வயது முதிர்ச்சி காரணமாக சில மாதங்களாக உடல்நலம் குன்றி காணப்பட்டார். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 19) மதியம் சொரூபானந்த சுவாமிகள் உயிர் பிரிந்தது.

இது பற்றிய தகவல் எழுதும் ஏராளமான பக்தர்கள் வந்து மடாதிபதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இரவில் இறுதி சடங்குகள் நடைபெற்று மடத்தின் ஒரு பகுதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முத்தானந்தபுரம் மடம் மடாதிபதி சொரூபானந்த சுவாமிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முத்தானந்தபுரம் மடம் கோவில்பட்டிக்கென்று தனித்துவமான வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட ஒரு மடம் ஆகும். காஞ்சி சங்கர மடத்தைப் போலவும், திருவாவடுதுறை ஆதீனத்தைப் போலவும், குன்றக்குடி ஆதீனத்தைப் போலவும், நம் கோவில்பட்டியிலும் ஒரு பாரம்பரியமிக்க மடம் இருக்கிறது.
இவ்விடத்தின் மடாதிபதியாக இருந்த சொரூபானந்த சுவாமிகளுடன் ஒரு சமயம் கலந்துரையாடியபோது, இந்த மடத்தின் வரலாறு குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அருட்பெருஞ்ஜோதி!
முத்தானந்தபுரம் என்ற பெயரே, இப்பகுதியுடன் தொடர்புடைய சுவாமிகளின் திருநாமத்தையும் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் நினைவூட்டுகிறது.

இந்தப் பகுதியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்
பல மருத்துவமனைகள் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில் அமைந்துள்ளன. இதற்கான காரணம் குறித்துச் சுவாமிகளிடம் ஒருமுறை கேட்டபோது, கடந்த காலங்களில் இப்பகுதியில் மருத்துவமனை வைத்துள்ள மருத்துவர்கள் சுவாமிகளுக்கு நெருக்கமானவர்களாகவும், அவரிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர்களாகவும் இருந்ததாகவும் அவர்களே தற்பொழுது இந்த பிறவியில் நம் மடத்தின் அருகே மருத்துவமனை அமைத்துள்ளார்கள் என்று கூறினார்.
இந்தத் தகவல்களையெல்லாம் கேட்டபோது, இந்த மடத்தின் பின்னால் மறைந்திருக்கும் வரலாற்றுப் பெருமையையும் ஆன்மிகச் சிறப்பையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
மடத்திற்குள் சென்று பாருங்கள்; வியந்து போவீர்கள்!
அத்தனை பாரம்பரியமும் ஆன்மிகச் சிறப்பும் கொண்ட இந்த மடத்தின் தற்போதைய மடாதிபதியாக விளங்கிய சுவாமிகள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.
அவர்களுடன் உரையாடிய தருணங்களும், அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களும், அவர்கள் பகிர்ந்துகொண்ட அரிய தகவல்களும் என்றும் என் நினைவில் நிலைத்திருக்கும்.
ஒரு மகானின் உடல் மறையலாம்; ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கையும், வழங்கிய வழிகாட்டுதலும், விட்டுச்சென்ற ஆன்மிகப் பாரம்பரியமும் ஒருபோதும் மறைவதில்லை.
அத்தகைய மகானின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து, அவர்களின் அருளையும் வழிகாட்டுதலையும் நினைவுகூர்ந்து என் பயணம் என்றும் தொடரும்.
இவ்வாறு ராஜகோபால் கூறியுள்ளார்







