• October 22, 2026

தமிழ்நாடு எம்பிக்கள் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்

 தமிழ்நாடு எம்பிக்கள் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்

 திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றியதுடன், பிற மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவையும் உருவாக்கி போராடினார்.

தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவரப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்க எதுவும் இல்லை. தி.மு.க.வின் முதன்மை கோரிக்கைகள் ஏற்கெனவே தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டன:

1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2026-க்குப் பிறகும் மேலும் 30 ஆண்டுகளுக்குத் தொகுதிகள் வரையறை நீட்டிக்கப்பட வேண்டும்.

பிரதிநிதித்துவ பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18% எக்காரணம் கொண்டும் குறைய கூடாது.

சிறப்பான செயல்பாட்டிற்கு தண்டனை கூடாது: குடும்ப கட்டுப்பாடு மற்றும் சமூக பொருளாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது.

காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சினையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தைக கூட்டாமல் த.வெ.க. அரசு கள்ளமௌனம் சாதிக்கிறது. மக்கள் கோரும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தாமல், தொகுதி மறுவரையறை குறித்து அவசர அவசரமாக கலந்தாய்வுக்கூட்டம் கூட்டுவது காவிரி பிரச்சினையிலிருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியாகும்.

மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தி.மு.க. பொதுச்செயலாளர் விதித்த நிபந்தனையை த.வெ.க. அரசு நிராகரித்துவிட்டதால், இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது.

தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?”.

இவ்வாறு கனிமொழி எம்பி கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *