முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்: அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டம் இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. இது தொடர்பாக
கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சுதீஷ் எம்பி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்ய சபா எம்.பி. யான கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள்ளார்

முதல் அமைச்சர் விஜய் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பின்வரும் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
காங்கிரஸ் – 12
வி.சி.க. – 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -1
ம.தி.மு.க. – 1







