சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ வல்லநாடு பகுதியில், சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தகவலின் பேரில் போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (42) மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த வேல்துரை (27) ஆகிய இருவரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களது நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் பேரில், 2 பேர் மீதும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
.







