காமன்வெல்த் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற கோவில்பட்டி வீரர் ராஜா முத்துப்பாண்டி; முதல் அமைச்சர் விஜய் ரூ,30 லட்சம் பரிசு அறிவிப்பு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 123 பேர் கொண்ட அணி பல்வேறு பிரிவுகளில் களமிறங்கி பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழகத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்னாட்ச் (Snatch) பிரிவில் 126 கிலோவும், கிளீன் & ஜெர்க் (Clean & Jerk) பிரிவில் 160 கிலோவும் என மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை ராஜா முத்துப்பாண்டி பெற்றுத்தந்துள்ளார்.
மலேசியாவின் முஹம்மது அஸ்னில் பின் பிடின், மொத்தம் 299 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றார். அதேவேளையில், பப்புவா நியூ கினியாவின் மோரியா பாரு மொத்தம் 282 கிலோ எடையைத் தூக்கி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு;
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







