தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது; ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உள்ள 500 ஏக்கர் உப்பளங்களில் சுமார் 300 உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாகச் சிறுகுறு உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சிப்காட் மூலம் 3,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கப்பல் கட்டும் தளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு கடலோர மீனவர்களும் உப்பளத் தொழிலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சார் ஆட்சியர் பிரபு நடத்திய பேச்சுவார்த்தையில் மாற்று இடம் தருவதாக கூறியதை உற்பத்தியாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, செயலாளர் சேகர், பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.

கடலோரப் பகுதியில் உப்பளம் மற்றும் மீன்பிடித் தொழிலை அழிக்கக் கூடாது எனவும், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.’இந்த போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.







