`வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு எதிர்ப்பு

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் எழுத்தாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி ஜெயா சனார்த்தனன் முன்னிலை வகித்தார். நடைபெற்ற வேலைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் க. தமிழரசன் விளக்கி பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
*திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், மதச் சுதந்திரத்திற்கு, தனி மனித உரிமைக்கு, பன்முகப் பாரம்பரியத்திற்கு எதிரான “வந்தே மாதரம்” பாடல் கட்டாயமாக பாடவேண்டும் என்றும், தேசிய கீதம் 2 வதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடவேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கோவில்பட்டி நீதிமன்றம் உட்பட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக புதுப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்றும், அதற்கான ஆணையை அரசு நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சார் ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் 29.7.26 அன்று மனு வழங்குவது.
*மந்தித்தோப்பு சாலை குடியிருப்போர் சங்கங்களின் சார்பாக 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3.8.26 அன்று மாலை 5 மணிக்கு கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் “இரவு தங்கும் போராட்டம்” நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆலோசனைக்கூட்டத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், ஞானம், பாலாஜி, கணேசன், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ், ராஜாராம், மகேந்திரன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், தியாகி விஸ்வநாத தாஸ் பேரவை சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







