கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 3 சிறப்பு டாக்டர்கள், எம்.ஆர். ஐ.ஸ்கேன் வசதி; அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை
மதிமுக எம் பி துரை வைகோ வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இன்று (26.07.2026) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜை சென்னையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் கடந்த 25.6.2026 அன்று நான் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினேன்.

முதலாவதாக, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, மிகவும் பழமையான கட்டிடங்களில் இயங்கி வருவதாலும், விரிவாக்கத்திற்கு போதிய இடவசதி இல்லாததாலும், மழைக்காலங்களில் நீர் தேக்கம் மற்றும் மருத்துவமனை முன்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாலும், ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகிலுள்ள பஞ்சக்கரை பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்திற்கு மாற்றி, அனைத்து நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனையாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.
மேலும், கடந்த 25.6.2026 அன்று நான் நேரில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண்டறியப்பட்ட குறைபாடுகளின் அடிப்படையில், பொதுமக்களின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

அதன்படி, மருத்துவமனையில் இருதய நோய் நிபுணர், நரம்பியல் நிபுணர் மற்றும் நெப்ராலஜி நிபுணர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்களை உடனடியாக நியமிக்கவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவப் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலமையக் கட்டிடத்திற்கு கூடுதலாக 3 மற்றும் 4-வது தளங்களை அமைக்கவும், மேலும், ஏற்கனவே தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள எம். ஆர். ஐ. ஸ்கேன் வசதியை கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் விரைவாக ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கேட்டுக்கொண்டேன்.
பொதுமக்களுக்கு தரமான, விரைவான மற்றும் முழுமையான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.

இக்கோரிக்கைகளை அமைச்சர் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்







