தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டின் 444-வது பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதலாம் திருப்பலியும், 6 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பேராலயப் பங்குத்தந்தை ஸ்டார்லின் முன்னிலையில் பனிமய மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி எடுத்து வரப்பட்டது.

பேராலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜெபத்துடனும், கரவொலியுடனும் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் புறாக்களைப் பறக்கவிட்டனர். கொடியேற்றத்திற்கு முன்னதாக பக்தர்கள் நேர்த்திக்கடனாகக் கொண்டு வந்த பால் மற்றும் பழங்கள் கொடிமரத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டன. கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பனிமய மாதாவுக்குப் பொன் மகுடம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குப்தாஉள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள், பிரார்த்தனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆகஸ்ட் 5 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாநாட்களை முன்னிட்டுத் தூத்துக்குடி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 660 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.







