மோதல் சம்பவம் : நடிகர் ஜி. பி.முத்து மனைவி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து என்ற ஜி.பி.முத்து (45). யூடியூபரான இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே கோயில் கட்டுவது தொடர்பாக, அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வருகிறது

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்து மற்றும் அவரது தம்பி இசக்கிமுத்து ஆகியோரது வீடுகளின் முன்பாக சிலர் கோழியை அறுத்து பலி கொடுத்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த ஜி.பி.முத்துவின் குடும்பத்தினர் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்துத் தட்டிக் கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் உருவானது.
இந்த மோதலின் போது, எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர் இரும்புக்கம்பி, பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர். இதில் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா மற்றும் உறவினர் இளையபெருமாள் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது பற்றி ஜி.பி.முத்து அளித்த புகாரின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம், வேம்புநாதன், முத்துகிருஷ்ணன், மகேஷ், சுந்தரவேல், சுடலையாண்டி ஆகிய 8 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோன்று எதிர் தரப்பை சேர்ந்த முத்து மகேஷ், சுந்தரவேல், மாடசாமி, ஆத்திசெல்வம் ஆகியோரைத் தாக்கியதாக ஜி.பி.முத்து, அவரது தந்தை கணேசன், மனைவி அஜிதா, தம்பி மனைவி அனிதா, இளையபெருமாள், வேல்முருகன் மற்றும் ஜி.பி.முத்துவின் குழந்தைகள் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, நடிகர் ஜி.பி.முத்து வீட்டின் அருகே இரு தரப்பினரும் பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் ஆயுதங்களால் வீசியும் தாக்கியும் மோதிக்கொண்டக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.







