தூத்துக்குடியில் 6 மாதமாக வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல் வைப்பு ; மாநகராட்சி நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிகக் கடைகள் இயங்கி வருகின்றன.

இதில் சிலர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கடராமன் அறிவுறுத்தலின்படி, உதவி வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் உதவியாளர்கள் அடங்கிய அலுவலர்கள் குழுவினர் நேற்று (24.7.2026) பழைய பேருந்து நிலைய பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வாடகை பாக்கி வைத்திருந்த 7 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், 2 மாதங்களுக்கு மேலாக வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளின் விவரப் பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் நிலுவைத் தொகையைச் செலுத்தாத அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

எனவே, மாநகராட்சி கடைகளின் குத்தகைதாரர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வாடகை நிலுவைத் தொகையை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செலுத்தி, சீல் வைப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.







