அதிமுக அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது ; சி.வி.சண்முகம்
சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயலை கிளப்பியுள்ளது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்

இந்தநிலையில், சென்னை , ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;-
அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் வரவிருப்பதாகக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. கட்சி அலுவலகத்துக்கு செல்லவில்லை.
இந்த ரத்தம் அதிமுகவின் ரத்தம். சாதாரண எங்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாவும் பதவிகளைக் கொடுத்து, அழகுபார்த்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம். இந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை நாங்கள் எங்களின் கோவிலாக மதிக்கிறோம்.

எந்த சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் எங்கள் கோவிலான தலைமை அலுவலகத்தின் மீது தூசி படுவதற்கோ, எங்களால் சிறிதளவும் பாதிப்பு ஏற்படுவதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
எந்த சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் நாங்கள் அங்கே வர மாட்டோம். நாங்கள் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த பிறகுதான், அங்கே எங்களின் கால் பதியும். ஆகையால், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. எந்த சூழ்நிலையிலும் அதிமுக அலுவலகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த விட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.







