ஜோதிடருக்கு அரசு பதவி: கடும் எதிர்ப்பால் தவெக அரசு வாபஸ் பெற்றது
தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விஜய், முதல்வருக்கான தனிச் செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டார். அதே போல், பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், சிலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், முதல்அமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக அவரது ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விஜய் உடன் பயணிக்கும் இவர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த சூழலில், ஜோதிடராக இருக்கும் ரிக்கி ரத்தன் பண்டிட்டை முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக முதல்-அமைச்சர் விஜய் நியமித்து உத்தரவிட்டிருப்பது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் ஒரு ஜோதிடருக்கு அரசுப் பதவி கொடுத்திருப்பது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக தவெகவுக்கு ஆதரவு அளித்த சிபிஎம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், மக்களிடமும் கடும் எதிர்ப்பு நிலவியது
. இதனிடையே தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று (13-05-26) தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது.

அப்போது தவெக அரசை ஆதரி ப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் விவாதங்கள் நடைபெற்றது.
அந்த விவாதத்தில் விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு, தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா , உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டை அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப்பதவி வழங்கிய உத்தரவை தவெக அரசு வாபஸ் பெற்றுள்ளது







