எங்கள் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற ஆசை வார்த்தை; எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
“அதிமுகவை பொறுத்தவரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகிய இருவரையும் முன்னிறுத்தியே வாக்கு சேகரித்தோம்.
நான் அதிமுகவின் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன். எல்லா கட்சிகளைப் போல எங்கள் கட்சியிலும் கருத்து வேறுபாடு உண்டு. அப்படியிருக்கையில், முதலமைச்சர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.

தேமுதிக கூறியது போல, குதிரை பேரம் வழிவகுத்திருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். அதிமுகவின் உறுப்பினர்கள் 47 பேரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு இந்திய அளவில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக அடித்தளமிட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானது. அதிமுகவில் வெற்றி பெற்றுள்ள 47 உறுப்பினர்களுக்கும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சி அமையவே மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனக்குக் கிடைத்த தகவலின்படி, எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற, அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறப்பட்டதாகக் கேள்விப்படுகிறேன்.
நீங்கள் (முதல்வர்) தூய்மையான ஆட்சியைத் தருவதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் எதிரி கட்சியாக அல்லாமல் எதிர் கட்சியாக இருக்கிறோம்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி, “நாங்கள் (அதிமுக) பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல. மக்களின் நலன் ஒன்றே எங்கள் குறிக்கோள். திமுக எதிர்ப்பு மட்டுமே எங்கள் அரசியல். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், ஆட்சியமைப்பதற்கு தவெகவிற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள். மக்களின் இந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். மக்களின் விருப்பத்திற்கேற்ப தவெக அரசைமைக்க நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம்” என்று பேசினார்.







