மனைவியை துன்புறுத்திவர் வெட்டிக்கொலை : மைத்துனர் உள்பட 2பேர் கைது
தூத்துக்குடி சக்தி விநாயகர் புரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் பூலப்பன் மகன் அந்தோணி சேசுராஜ் (27). இவருக்கும் தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகளைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

மதுபோதையில் அந்தோணி சேசுராஜ் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவரது மனைவி, கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டார். \
தனது சகோதரியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த அந்தோணி சேசுராஜ் மீது ஆத்திரம் அடைந்த அவரது மைத்துனர் அருண்குமார் (27) மற்றும் அவரது நண்பர்கள் சுதாகர், செல்வகுமார் மற்றும் ஒருவர் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.
நேற்று இரவு, தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அந்தோணி சேசுராஜை அவர்கள் மது குடிக்க வருமாறு ஏமாற்றி அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் மது அருந்தியதாகத் தெரிகிறது.

அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தோணி சேசுராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் , உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆனந்தராஜ் மகன் சுதாகர் (29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.







