புதுச்சேரி முதல்-மந்திரியாக ரங்கசாமி பதவியேற்றார்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்து, ஆதரவு கடிதம் வழங்கினர்.

இதையடுத்து அவர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு ரங்கசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று முன்தினம் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். அப்போது புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.
இந்தநிலையில் 5-வது முறையாக புதுவை மாநில முதல்-மந்திரியாக ரங்கசாமி இன்று (புதன்கிழமை) காலை 9.45 மணிக்கு பதவியேற்றார். இதற்கான விழா கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுச்சேரி மாநிலத்தின் 16-வது சட்டமன்ற முதல்-மந்திரியா ரங்கசாமி கடவுள் மீது ஆணையிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். முதல்-மந்திரி ரங்கசாமியை தொடர்ந்து பா.ஜனதாவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
விழாவில் பா.ஜனதா தேசிய தலைவர் நிதின்நபின், மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா,மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.







