கோவில், பள்ளிகள் அருகே செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
தமிழ்நாட்டில் 4,829 ‘டாஸ்மாக்’ மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக ‘டாஸ்மாக்’ இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன். தமிழகத்தில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைப் பாது காக்கவும் 65 சிறப்பு படைகள் அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 ‘டாஸ்மாக்’ கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக்’ பார்களில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது.

மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.








