பைக் விபத்தில் பலியான போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவில்பட்டியில் பணியாற்றியவர்
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அரவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் வேல்பாண்டி (வயது 32). இவர் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்தவர். தப்போது முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

நேற்று வேல்பாண்டி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் முறப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் நெல்லை கே.டி.சி நகர் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண், எதிர்பாராத விதமாக வேல்பாண்டியின் பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேல்பாண்டிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்பாண்டி, மாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்துப் பாளையங்கோட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டர் ஓட்டிய பெண் குறித்தும், விபத்து நடந்த விதம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 32 வயதே ஆன இளம் அதிகாரி விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.







