சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு: முதல் தலைமுறை வாக்காளர்கள் உறுதியேற்பு

கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் சார்பில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 சதவீத வாக்குபதிவு செய்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் முறையாக வாக்குபதிவினை பதிவு செய்யும் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் மாண்புமிக்க ஜனநாயக மரபுகளையும்,சுதந்திரமான,நேர்மையான, அமைதியான, தேர்தல் முறையையும், எந்நாளும் போற்றி பாதுகாத்திடவும், எவ்வித அச்சமுமின்றி மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் பாகுபாடுகளுக்கு இடமளிக்காமலும், எந்தவொரு ஆசை வார்த்தைகளுக்கும், தூண்டுதல்களுக்கும், ஆட்படாமலும்,ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் ஜனநாயக கடமையான வாக்கினை பதிவு செய்திடவும், அனைவரிடமும் வாக்கு பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 சதவீத வாக்கு பதிவு செய்திட ,உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கல்லூரியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் செல்வராஜ்,ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி ரோட்ராக்ட் சேர்மன் ஹரிஹர சுதன் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பேசினார்.

கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் அருண்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், கண்ணன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, மணிகண்டன்,கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் விஜய கோபாலன் நன்றி கூறினார்.







