தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மழை ; மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் அதிபர் பலி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும், கடற்கரை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் காலை நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதி நகரைச் சேர்ந்தவர் மருதநாயகம் மகன் சிவகுமார் (41), கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இன்று காலை 9 மணியளவில் மாப்பிள்ளையூரணியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டு வாசல் அருகே அறுந்து கிடந்த வயரை எடுத்து போட முயன்றபோது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இன்று காலை பலத்த மழை பெய்தது. பின்னர் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நண்பகலுக்கு மேல் மழை ஆரம்பித்து பெய்தபடி இருந்தது.







