கல்லூரி மாணவர் மாநில ஆக்கி: முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட அணிக்கு 13.5 லட்சம் பரிசு


முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டியில் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.
போட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில், காலியிறுதி வரை நாக் அவுட் முறையிலும், அதன் பின்னர் லீக் முறையிலும் போட்டிகள் நடத்தி புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் பிற்பகல் வரை காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இன்று காலை நடந்த முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியுடன் தூத்துக்குடி அணி மோதியது. இதில், 4 – 0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.
அடுத்த ஆட்டத்தில் செங்கல்பட்டு அணியுடன் கோயம்புத்தூர் அணி மோதியது. இதில், 6 – 2 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு அணி வெற்றி பெற்றது. மாலையில் நடந்த முதல் லீக் போட்டியில் கோயம்புத்தூர் அணியுடன் சென்னை அணி மோதியது. இதில், 12 – 2 என்ற கோல் கணக்கில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்றது.
கடைசி போட்டியாக தூத்துக்குடி மாவட்ட அணியும், செங்கல்பட்டு மாவட்ட அணியும் மோதின. இதில், 4 – 1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்றது.

லீக் போட்டிகளில் 9 புள்ளிகளுடன் தூத்துக்குடி மாவட்ட அணி முதலிடமும், 6 புள்ளிகளுடன் சென்னை மாவட்ட அணி 2-வது இடமும், 3 புள்ளிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட அணி 3-வது இடமும் பிடித்தன.
போட்டிகள் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.13.50 லட்சம், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.9 லட்சம், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.4.50 லட்சம் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

விழாவில், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம், வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து, அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் இந்திய ஆக்கி வீரர் முஹம்மது ரியாஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சென்னை மண்டல முதுநிலை மேலாளர் ராஜா,
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி அதிர்ஷ்டராஜ், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் சி.குருசித்ர சண்முக பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் ரத்தினராஜ் செய்திருந்தார்.







