அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவில்பட்டி மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு; வணிகர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடி இருப்பதாக மாநில தலைவர் குற்றச்சாட்டு

அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவில்பட்டி மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்புவிழா இன்று நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மண்டல தலைவர் ஆர்.கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். எஸ்.ராஜ்குமார் வரவேற்றார். எல்.ஞானதுரை, வழக்கறிஞர் பி.சிவக்குமார், எம்.எஸ்.எம்.ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத்தலைவர் கொளத்தூர் த.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவில்பட்டி மாவட்ட தலைவராக பி.தங்கமணி, செயலாளராக எஸ்.ராஜ்குமார், பொருளாளராக எம்.ஜெயபாசு, துணைத் தலைவராக செல்வகுமார் , இணை செயலாளர்களாக எஸ்.ஆர். பாஸ்கரன், தங்க மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
விழாவில், தொழில் வர்த்தக சங்கம் விநாயகா ரமேஷ், வழக்கறிஞர்கள் ரவிக்குமார், வினோத்கண்ணன் கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துராஜா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வணிக உரிமம் பெற்றவர்களை, வணிக நலவாரியத்தில் அரசே உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். மே 5-ம் தேதி வணிகர் தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழா முடிவில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர்த. ரவி, செய்தியாளர்களிடம் கூறியாதாவது :-
அந்நிய முதலீட்டில் வரக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தைத் தான் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நான் இருக்கும் வரை அந்நிய ஆன்லைன் வர்த்தகத்துக்கு இடம் தரமாட்டேன் என்றார். அதனால் 20 ஆண்டுகளாக நிம்மதியாக இருந்தோம்.

ஆனால், தற்போது யார் வேண்டுமென்றாலும் வணிகம் செய்யலாம். ஆனால், தமிழகத்தில் 21 லட்சம் சிறு வணிகர்கள் சின்னபின்னமாகி வருகின்றனர். ஒரு கணக்கெடுப்பின்படி 29 சிறுவணிகங்கள் அழிந்து கொண்டுள்ளது. மீதமுள்ள சிறு வணிகங்களை காப்பாற்ற அந்நிய ஆன்லைன் முதலீடு அறவே வரக்கூடாது என்பதை சட்டமாக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பதற்கு வணிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவதை வாடிக்கையாக வைத்துள்ளதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

அமைச்சர்கள், அமைச்சர்களானது 11 சதவீத வளர்ச்சியை எட்டிவிடுவார்கள். அவர்கள், பொதுமக்களையும், வணிகர்களையும் சந்தித்தது இல்லை. வணிக நல வாரியத்தில் உள்ள சலுகைகளை எந்த அரசும் வணிகர்களுக்கு வழங்கியதே கிடையாது. வணிக நல வாரியத்தில் உறுப்பினர்களாவதற்கு பல தடைகள் உள்ளன. அரசுகள் வணிகர்களுக்கு எதுவும் செய்வதில்லை. ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக சிறு வணிகர்கள் தொடர்ந்து போராடி நிற்கிறோம். எங்கள் பேரமைப்பு அரசியல், சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. வணிகர்களுக்கு அதிகாரிகளால் 100 சதவீதம் நெருக்கடி இருக்கிறது,
இவ்வாறு அவர் கூறினார்.







