பழிக்குப்பழி சம்பவம்: அக்காள் கணவரை கொன்றதாக கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது மகன் சிவசூரியன் (வயது 34). இவர் இன்று காலை 11 மணி அளவில் உடன்குடியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வேப்பங்காடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவரை பின்தொடர்ந்து ஒரு கார் வேகமாக வந்தது. வேப்பங்காடு சர்ச் அருகே சிவசூரியன் மோட்டார் சைக்கிள் மீது அந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவசூரியனை அந்த காரில் வந்த 4 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல், வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சிவசூரியன் பரிதாபமாக இறந்தார். பின்னர், அந்த கும்பல் காரில் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவசூரியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட சிவசூரியன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாமரை மொழி கிராமத்தை சேர்ந்த தனது அக்காள் கணவர் கந்தையா என்பவரை கொலை செய்தாக தட்டார் மடம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று 9ஆம் தேதி ஜாமினில் வந்த சிவசூரியன் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் விசாரணை யில் தெரிய வந்துள்ளது,. மேலும் இவரை கொலை செய்தது கந்தையாவின் உறவினர்கள் என்று தெரியவந்தது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்







