மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகே உள்ள வடக்கு செவல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரா மகன் பெத்துராஜ் (வயது 23), காலனி தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ரமேஷ் (18), மேலத் தெருவைச் சேர்ந்தவர் வேல்வாசகம் மகன் மாரி லிங்கம் (19), இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று இரவு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேம்பாரில் உள்ள கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தை பார்ப்பதற்காக வடக்கு செவல் கிராமத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். சிலுவைபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் பெத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 2பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ரமேஷ் உயிர் பிரிந்து விட்டது,.. மாரி செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சூரங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரவீனா வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் கிளாக்குளம் வீரவநல்லூரை சேர்ந்த மாரியப்பன் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.







