மானாவாரி நிலங்களில் கடல் பாசி உரத்தை பயன்படுத்த சொல்வதா? கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் கண்டனம்
கோவில்பட்டி கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெய்யக் கூடிய பருவ மழையை நம்பி உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகிறது.
அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இந்நிலையில் பாசன நிலங்களான ஆற்றுப் பாசனம், நன்செய் பாசனம், கிணற்றுப்பாசனத்தில் ஒரு வித சாகுபடி முறையும், மானாவாரி நிலங்களில் ஒரு வித சாகுபடி முறையும் செய்யப்படுகிறது.

மானாவாரி நிலங்களில் உலர் உரங்கள், விதைகள் தூவி சாகுபடி செய்யப்படுகிறது. நீர் பாசன நிலங்களில் கரைசல் மற்றும் களிம்பு உரங்களும், விதைகள் மற்றும் நாற்றுகளை ஊன்றி சாகுபடி செய்யப்படுகிறது. வரக்கூடிய புரட்டாசி முதல் வாரத்தில் மானாவாரி நிலங்களில் விதைப்பு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் உரக்கடைகளில் அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியா, விதைகள் முன் கூட்டி வந்து விட்டன. வசதி உள்ள மற்றும் வாடிக்கை விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் விதைகள் வழங்கி வருகின்றன.
பெரும்பாலான விவசாயிகள் அவரவர் கிராமங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்றுஅடி உரம் டிஏபி, மேலுரம் யூரியா வாங்குவார்கள். வேளாண்மை விரிவாக்க மையங்களில் உளுந்து, பாசி , சூரிய காந்தி விதைகள் இருப்பு உள்ளது. மழை பெய்தவுடன் முதல் விதைப்பாக மக்காச் சோளம், உளுந்து, பாசி , பருத்தி. விதைப்பது வழக்கம். சூரியகாந்தி மழைக்காலம் முடிந்து மார்கழி பனி மாதத்தில் விதைக்கப்படுகிறது.

ஆனால் முதலில் விதைக்க மக்காச் சோளம் எந்தவொரு வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் வரவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகளே விதைகள் தனியார் கடைகளில் வாங்கி விட்டு அதன் பில் மட்டும் வேளாண்மை துறையிடம் கொடுத்தால் அதற்குரிய 50% மானியத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அரசு விடுவிப்பது வழக்கம்.
அந்நடைமுறையை தற்போதைய அரசு மாற்றி அரசே நேரடியாக விதைகளை கொள்முதல் செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகளை விற்பனை செய்கிறது. இதனால் விவசாயிகள் விரும்பிய விதைகளையும் வாங்க முடியவில்லை. கூடுதல் விளைச்சலும் கிடைப்பதில்லை.
செப்டம்பர் முதல் வாரம் முதல் விதைப்பு பணியை தொடங்கி விடுவார்கள் அதற்கு முன்னர் விவசாயிகளுக்கு வேண்டிய விதைகளை வேளாண்மை துறை வழங்க வேண்டும். தவிர தமிழகத்தில் உள்ள நாணூறுக்கும் மேற்பட்ட வேளாண் விரிவாக்க மையங்ளில் கடந்த வாரம் ஒவ்வொரு வேளாண் விரிவாக்க மையத்திற்கும் ரூ. 40 லட்சம் பெறுமான கடல் பாசி உரங்கள் வந்துள்ளன.20 கிலோ கொண்ட கடல்பாசி களிம்பு உரம் ரூ 3 ஆயிரம் பெறுமானது 50% மானியத்தில் ரூபாய் 1500/= க்கு வழங்கப்படுகிறது.
இவ்வுரங்கள் ஈரத்தன்மை உடையதாகும். இவற்றை பாசன வசதி உடைய நிலங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதை மானாவாரி விவசாயிகளுக்கும் வழங்கு கின்றனர். இக்கடல்பாசி உரம் உலர் தன்மை இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை. தவிர மாவட்டத்தில் எந்தவொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் டிஏபி உரம் இருப்பு இல்லை.டி ஏபி உரம் தட்டுப்பாடு இன்றியும் முறைகேடின்றியும் விவசாயிகளுக்கு கிடைக்கவும், கடல் பாசி உரத்திற்கு பதில் உலர் உரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் /
மேலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிலப் பட்டா மூலம் ஒரு வருடத்திற்கு வட்டியில்லா கடன் எவ்வித அடமானம் இன்றி ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கூட்டுறவு சட்டத்தில் இணைந்து இந்த ஆண்டு முதல் ரூ 3 லட்சம் வரை அடமானமின்றி வழங்கப்படும் என அறிவித்தது. எவ்வித அடமானமின்றி ஒரு வருடத்திற்கு வட்டியில்லா கடன் ரூ 3 லட்சம் வரை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறி உள்ளார்.







