விவசாயிகளின் விளைநிலத்தை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாவட்டச் செயலாளர் அருமைராஜ் தலைமை தாங்கினார்.
. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சங்கிலிகுமார், நகர தலைவர் சிவகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கருப்பசாமி, முத்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் நீர்நிலைகள் நீர்வழித்தடங்கள் தனியார் காற்றாலைகளுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது.
*தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

*கோவில்பட்டி வட்டத்தில் துறையூர், சிவந்திபட்டி, கிழவிபட்டி ஓடைகளை தனியார் காற்றாலை உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைத்து ஆக்கிரமித்ததை அகற்ற வேண்டும்.
*ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்தனன் ஓய்வு பெறுவதையொட்டி ஊராட்சி செயலாளர்கள் வசூல் செய்து 10 பவுன் தங்க நகை அணிவித்து பிரிவுபசார விழா நடத்தி இருப்பது ஊராட்சிகள் மூலம் ஊழல் நடந்து வருகிறது என்பதை காட்டுகிறது.
*தூத்துககுடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அலட்சியம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் இருந்து வடகால், தென்கால் பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் நெல், வாழை விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்களே கார்பரேட் நிறுவனங்களுக்கு கைக்கூலிகளாக மாறியுள்ளனர். எனவே, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் சிப்காட் அமைக்கிறோம் என்ற பெயரில் நல்ல வளமான நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் சாகுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அபகரிக்க தமிழக அரசு முயற்சி எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எட்டயபுரம் அருகே வெம்பூரில் மட்டும் 700 ஏக்கர் விளை நிலத்தை சிப்காட் அமைக்க கையகப்படுத்துகின்றனர். இதற்குவிவசாயிகள் அனுமதிக்கவில்லை. தரிசு நிலங்களில் சிப்காட் அமைப்பதில் தடையில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வெம்பூரில் நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்.
அருப்புக்கோட்டை அருகே கோவிலான்குளத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் 129 ஏக்கர் நிலத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலத்தை சிப்காட் அமைக்க தமிழக அரசு எடுப்பதை கண்டித்து நாளை (31-ம் தேதி) விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளின் விளைநிலத்தை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தேர்தல் களத்தில் திமுக எதிராக தீவிரமாக களமாட வேண்டிய நிலை வரும்.
கள் இறக்குவதற்கு ஆதரவாக சீமான் போராட்டம் நடத்தியது வரவேற்கத்தக்கது. கள் ஒரு உணவு பொருள். தென்னையும், பனையையும் பாதுகாக்க அரசு முன் வர வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பை அமல்படுத்துவோம் என திமுக சொன்னது. ஆனால், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மது விற்பனை அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் அனுமதிக்க முடியாது என்று சொல்ல முடியாது என தற்போது நியாயப்படுத்துகின்றனர். ஆனால், அந்த மாநிலங்களில் கள் விற்பனை உள்ளது. ஏன் தமிழகத்தில் மட்டும் கள் விற்பனைக்கு அனுமதியில்லை என்பதின் உள்நோக்கம் என்ன?. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மட்டும் கொள்கைப்பூர்வமாக செயல்படுத்த தமிழக அரசு முன் வருகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் 40 சதவீதம் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்கள் வேகமாக வீட்டுமனைகளாக மாறி வருகிறது.ரியல் எஸ்டேட்டின் ஆதிக்கம் வேகமெடுத்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளை நிலங்களை சேதப்படுத்தும் சுடுவதற்கு சட்டம் கொண்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த சட்டம் பெயரளவில் உள்ளது. எனவே, காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு வனத்துறைக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். திமுக அரசு கார்பரேட்களின் அரசாக மாறிவிட்டது. விளைநிலங்களை கார்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதற்கு தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 வழிவகுக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இந்த சட்டம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.







